கொழும்பு : "போரில் இருந்து தப்ப வேண்டும்; விடுதலைப் புலிகளிடமும் சிக்கிவிடக்கூடாது' என்று நினைக்கும் தமிழ் இளைஞர்கள், இப்போது, கத்தார் நோக்கி, "படையெடுக்க' ஆரம்பித்துவிட்டனர்.
எதற்காக ...? "அங்கு போனால் கை நிறைய சம்பாதிக்கலாம்; அமைதி திரும்பியதும், இலங்கைக்கு வரலாம்' என்ற எண்ணத்தில் தான். யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதியில் உள்ள பெரும்பாலான, தமிழ் இளைஞர்கள், பெண்களிடம் இந்த எண்ணம் உள்ளது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பலரும், பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து, கத்தார் போக தயாராகி விடுகின்றனர். மேற்காசியாவில் வளைகுடா பகுதியில் உள்ள கத்தாரில், பணியாள் வேலை கிடைத்தாலே, பல ஆயிரம் சம்பாதிக்க முடியும். இலங்கைத் தமிழ் இளைஞர்கள், பெண்களுக்கு அங்கு, இந்த வேலை கிடைப்பது சுலபமாக உள்ளது. இலங்கையில் இருந்தால், ஒரு பக்கம் ராணுவம் மிரட்டுகிறது; இன்னொரு பக்கம், விடுதலைப் புலிகள் அழைத்து சென்று விடுகின்றனர் என்ற பயம் தான், இந்த இளைஞர்களை கத்தார் செல்ல வைக்கிறது. இலங்கையில், 1983ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடன் ராணுவம் போரிட ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு முறையும், திரிகோணமலை, யாழ்ப்பாண பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு, அகதி முகாம்களில் தான் அடைக்கலம். ராணுவ கெடுபிடி அதிகம் இருக்கும் என்பதால், பள்ளிகளில் படிக்கவும் முடியாது; வேலைக்கு செல்லவும் வழியில்லை. அப்படியும், தப்பிச் சென்று, கொழும்பு வழியாக, கத்தார் போய்விட்டனர் சிலர். அவர்கள் எல்லாரும், கத்தாரில் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் உறவினர்களும், கத்தார் போய்விட்டனர். இதைப்பார்த்து தான், இப்போது பல இளைஞர்ளும், கத்தார் கனவில் உள்ளனர். கொழும்பு வழியாகத்தான் கத்தார் போக முடியும். கொழும்புக்கு வரவே, தமிழர்களுக்கு, "விசா' கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயம். திரிகோணமலையில் இருந்து கொழும்பு வர, முன்பெல்லாம் சில மணி நேரம் ஆகும். ஆனால், இப்போது மூன்று வாரம் பிடிக்கிறது. ஆறாயிரம் ரூபாய் இருந்தால், கத்தார் போய்ச் சேர முடியும். வேலை கிடைக்க தனியார் ஏஜென்ட்டுக்கு பணம் தர வேண்டும். கடந்த சில காலமாக, விடுதலைப் புலிகள் ராணுவம் இடையே போர் இல்லாமல் இருந்ததால், தமிழ் இளைஞர்கள் நிம்மதியாக இருந்தனர். போர் வந்துவிட்டால், தமிழ் இளைஞர்களுக்கு பிரச்னை தான். அவர்களை பிடித்து சென்று ராணுவ பயிற்சி அளித்து, தங்கள் படையில் சேர்த்து விடுவர் புலிகள். இப்போது மீண்டும் பிரச்னை அதிகரித்து வருவதால், பல தமிழ் இளைஞர்களும், கத்தார் நோக்கி "படையெடுக்க' தயாராகி விட்டனர்.
தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment