Thursday, 24 May 2007

சேவலாக மாறிய பெட்டைக்கோழி மேற்குவங்க கிராமத்தில் ஆச்சரியம்

சிலிகுரி, மே 24: ஆண்கள் பாலியல் மாற்றம் காரணமாக அறுவை சிகிச்சையில் பெண்ணாக மாறிவிடுவது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முட்டையிட்டு குஞ்சு பொறித்த பெட்டைக் கோழி ஒன்று சேவலாக மாறி பெட்டைக் கோழிகளை தேடி சென்று வரும் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கமட் செங்கிரபாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜிருதீன் முகமது. இவருடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார். அதில் கோழி ஒன்று இயற்கையாகவே ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக சேவலாக மாறி உள்ளது. இந்த கோழி, ஆறு மாதங்களுக்கு முன்பு முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளது.
அதன்பின்பு அதனிடம் சிறிது, சிறிதாக மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது. அதன் தலையில் கொண்டை வளர ஆரம்பித்தது. திடீர், திடீரென பெட்டைக் கோழிகளை துரத்தியது. பெட்டைக் கோழிக்கான தன்மை மாறி சேவலுக்கான தன்மை அதனிடம் ஏற்பட்டது தெரியவந்தது. தனக்கென ஒரு பெட்டை கோழிகள் கூட்டத்தை சேர்த்து கொண்டு திரிந்தது. அதனிடம் எந்த சேவல் அண்டினாலும் அதை கொத்தி துரத்தியது. சேவல்கள்தான் இதுபோன்று செய்யும்.
மேலும், சேவலுக்குரிய இனவிருத்தி உறுப்பும் அதனிடம் வளர ஆரம்பித்துள்ளது. இச்செய்தி பரவியவுடன் கால்நடைத் துறை அதிகாரிகள் ஹஜிருதீன் வீட்டுக்குச் சென்று, சேவலாக மாறிய கோழியை ஆராய்ந்தனர். அவர்களுக்கும் இது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் இதுபோன்று கோழி ஒன்று இயற்கையாகவே சேவலாக மாறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இதுபோன்று ஒரு கோழி சேவலாக மாறியதாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த அதிசய சேவலை ஆராய்வதற்காக அதை தங்களிடம் தருமாறு கால்நடை துறை அதிகாரிகள் ஹஜிருதீனிடம் கேட்டனர்.
ஆனால், அதிசய சேவலை பார்க்க வரும் மக்கள் காசு தருவதால், அதை அதிகாரிகளிடம் தர மறுத்துவிட்டார்.

தினகரன்



No comments: