Saturday, 3 February 2007

பெண்களை கொலை செய்யவில்லை சாமியார் பரபரப்பு பேட்டி





சுவாமி அமுதானந்த தவயோகி "மாலைமலர்'' நிருபரிடம் கூறியதாவது:-

என் பெயர் செல்லத்துரை. வயது 67. என் பூர்வீகம் நெல்லை மாவட்டம் மணியாச்சி. நான் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். 1960-களில் பத்திரிகையாளனாக இருந்தேன். வார இதழ்களிலும் வேலை பார்த்துள்ளேன். "செல்வ அமுது'' என்ற புனை பெயரில் கதை, கவிதைகள் எழுதி உள்ளேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் மீது பற்று உண்டு. விவேகானந்தர் எழுதிய நூல்களை அதிகம் படிப்பேன். இதனால் எனக்கு தெளிவு ஏற்பட்டது. 1980-ம் ஆண்டு துறவி ஆனேன்.

இளம் வயதில் மது, புகைப்பழக்கம் உள்ளிட்ட சிற்றின்பத்தில் திளைத்த நான் துறவி ஆன பிறகு அந்த பழக்கங்களை விட்டுவிட்டேன். இன்றுவரை உப்பு இல்லாத பச்சை காற்கறி உணவுகளையே சாப்பிட்டு வருகிறேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு சேலைïரில் முதன் முதலாக ஆசிரமம் தொடங்கினேன். அந்த பகுதியில் விமானங்கள் ஏறும், இறங்கும் சத்தம் அடிக்கடி அதிகம் கேட்டது. இதனால் என் மன அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கு இருந்த ஆசிரமத்தை செங்குன்றத்துக்கு மாற்றினேன். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தின் மாசு ஏற்படுத்தும் சூழலால் குடிநீர் மாசுபட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த என் ஆசிரமத்தை சோழவரத்துக்கு மாற்றினேன்.

இங்கு 18 லட்சம் ரூபாய் செலவில் சொந்த நிலம் வாங்கி ஆசிரமம் கட்டி நடத்தி வருகிறேன்.

ராமகிருஷ்ணா பரமஹம்சரின் அபிமானிகள் ஆதரவுடன், நிதி உதவி பெற்று மனிதாபிமானத்தோடு இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறேன். உலகில் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அனாதை என்று யாரும் கிடையாது. இந்த அடிப்படையில்தான் ஆசிரமத்துக்கு வரும் முதியவர்களையும், குழந்தைகளையும் மனிதாபிமானத்தோடு பராமரித்து வருகிறேன்.

ஆசிரமத்தில் வளர்ந்த 9 பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன். சிறுவர்கள் பெரியவர்களானதும், அருகில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளேன். இளம் பெண்களை மட்டும் நன்றாகவும், அக்கறையுடனும், பார்த்து அவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு எது நல்லதோ, எது தேவையோ அவற்றை செய்து வருகிறேன்.

இப்படிப்பட்ட என் மீது சிலர் தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். இளம் பெண்களை கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். நான் யாரையும் கொன்று புதைக்கவில்லை.

ஆசிரமத்தில் தங்கி இருந்த சில முதியவர்கள் கடும் பனி காரணமாக மரணம் அடைந்து விட்டனர். அவர்களுக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லாததால் ஊர் வெட்டியானை அழைத்து ஆசிரமம் சார்பாக அடக்கம் செய்தோம்.

இறந்தவர்கள் அனைவரும் நோயாளிகள்- வயோதிகர்கள்- ஆதரவற்றவர்கள். அவர்கள் இறந்ததை நான் யாருக்கு சொல்ல வேண்டும்? ஏன் பதிவு செய்ய வேண்டும்?

இதுதான் உண்மையில் நடந்தது. இதுவரை 7 பேர் இங்கு இறந்துள்ளனர். அவர்களை நான் சொன்னபடி அடக்கம் செய்துள்ளேன்.

மற்றபடி எந்த இளம்பெண்களையும் நான் தவறாக நினைக்கவில்லை. தவறாக அழைக்கவும் இல்லை. ஆசிரமத்தில் உள்ள அனைவரும் என் குழந்தைகள். மனித நேயமும், காளி சக்தியும் உலகிற்கு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

இவ்வாறு சுவாமி அமுதானந்த தவயோகி கூறினார்.


நள்ளிரவு பூஜையில் தப்பி ஓடிய மார்வாடி

சாமியார் அமுதானந்த தவயோகி தற்போது 1008 நாள் காளி பூஜை நடத்தி வருகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆசிரமத்தில் அனைவரும் தூங்கிய பின்னர் ஒவ்வொரு நாளும் தனியாக பூஜை நடத்துவது இவரது வழக்கம்.

சமீபத்தில் ஒருநாள் இவருடன் பூஜையில் மார்வாடி ஒருவர் பங்கேற்றிருக்கிறார். அப்போது சாமியார் "ஓம் க்ரீம் பம் காளி மகாசக்தியே...'' என்று அலறியபடி எழுந்து ஆடியிருக்கிறார்! அவ்வளவுதான் உடன் இருந்த மார்வாடி அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கதவை திறந்து கொண்டு ஓடியிருக்கிறார்.

இந்த தகவலை தனது தவ வலிமை என ஆர்.டி.ஓ. சங்கீதாவிடம் சாமியார் தெரிவித்தார்.


தகவல்

No comments: