Saturday, 3 February 2007

பெண்கள் பாலியல் பலாத்காரமா?- சாமியாரிடம் விசாரணை- ஆசிரமத்தில் அதிரடி சோதனை

பொன்னேரி, பிப்.3-

சோழவரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா ஆத்மாலயம் எனும் அனாதை ஆசிரமத்தை சுவாமி அமுதானந்த தவயோகி நடத்தி வருகிறார். இங்கு அனாதை சிறுவர்- சிறுமிகள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என 225 பேர் தங்கி உள்ளனர்.

சுவாமி அமுதானந்த தவயோகி அடிக்கடி நள்ளிரவில் காளிபூஜை மற்றும் யாகம் நடத்துவார். இதில் ஆசிரமத்தில் உள்ள இளம்பெண்கள் பங்கேற்பார்கள். அதோடு ஏராளமான வெளியாட்களும் கலந்து கொள்வார்கள். காளிபூஜை முடிந்ததும் சாமியார் ஆசி வழங்குவார். இதனால் நோய், கஷ்டம் நீங்குவதாக மக்களிடம் தகவல் பரவியது. இதன் காரணமாக ஆசிரமத்துக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது.

இந்த நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களில் 10 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். அவர்களது பிணம் இரவோடு இரவாக ஆசிரமம் அருகில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்த மர்ம சாவுகள் குறித்து ஊராட் சியிலோ, கிராம நிர்வாக அதிகாரியிடமோ பதிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையே சுடுகாட்டில் அடுத்தடுத்து 10 பேர் உடல்கள் மர்மமாக புதைக்கப்பட்ட தகவல் பஞ்சாயத்து தலைவர் பிரபாகரனுக்கு தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்தார்.

மர்மமாக இறந்தவர்கள் அனைவரும் இளம்பெண்கள் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்கள். அந்த பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காளி பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து தான் ஆசி வழங்கவார் என்று கூறப்படுகிறது.

எனவே ஆசிரமத்தில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். மேலும் ஆசிரம பெண் களில் பலர் தோல் நோயால் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் போலீசார் நேற்று சோழவரம் ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கு சுவாமி அமுதானந்த தவயோகியிடம் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.

ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்களிடமும் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் தங்களுக்கு "சரிவர சாப்பாடு தரப்படுவது இல்லை'' என்று புகார் தெரிவித்தனர். சிலர் சுகாதார சீர்கேடு பற்றி கூறினார்கள்.

நேற்று இரவு நேரமாகி விட்டதால் ஆசிரமத்தில் உள்ள இளம்பெண்களிடம் விசாரணை நடத்தப்பட வில்லை. இன்று 2-வது நாளாக போலீசார் ஆசிரமத்துக்கு சென்றனர். திருவள்ளூரில் இருந்து பெண் போலீசார் வந்தனர்.

அவர்கள் ஆசிரமத்து இளம் பெண்களை தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். சாமியார் தகாதமுறையில் நடந்து கொண்டாரா என்று விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறை போலீசாரும் ஆசிரமப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. சங்கீதா ஆசிரமத்துக்கு வந்தார். 10 உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது குறித்து அவர் சாமியாரிடம் விசாரணை நடத்தினார். இறந்தவர்கள் பற்றி ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்டார்.

அதற்கு சாமியார் இறப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியாது என்றார். இதை ஆர்.டி.ஓ. சங்கீதா ஏற்கவில்லை. எம்.ஏ. படித்து பத்திரிகைகளில் வேலை பார்த்துள்ளவருக்கு இந்த விதி எப்படி தெரியாமல் இருக்கும் என்றார். இதற்கு சாமியார் பதில் சொல்லவில்லை. ஆர். டி.ஓ.வின் கேள்விகளுக்கு சாமியாரின் பதில்கள் முன்னுக்குபின் முரணாக இருந்தன.

இதையடுத்து ஆசிரமத்தின் ஒவ்வொரு அறைக்கும் சென்று ஆர்.டி.ஓ. சங்கீதா அதிரடி சோதனை நடத்தினார்.

முதலில் சாமியார் காளி பூஜை நடத்தும் அறையில் சோதனை நடந்தது. அந்த அறையை சுற்றிப்பார்த்த ஆர்.டி.ஓ. சங்கீதா சாமியாரிடம் தினமும் இரவு எத்தனை மணிக்கு பூஜை செய்வீர்கள்? பூஜையில் யார்- யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்? இளம் பெண்கள் வருவார்களா? எதற்காக இந்த காளி பூஜை நடத்தப்படுகிறது? என்று அடுக்கடுக்காக அதிரடிகேள்விகளை கேட்டார்.

உடனே சாமியார், "உலகில் தீயச்செயல்கள் அதிகமாகி விட்டது. இதை ஒழிக்கவே காளிபூஜை நடத்துகிறேன். நேற்றுடன் காளிபூஜையின் ஆயிரமாவது தினத்தை நிறைவு செய்து விட்டேன். சுனாமி தீ விபத்து போன்றவைகளை என் சக்தியால் உண்டாக்கி தீயவர்களை நான்தான் அழித்தேன்'' என்றார்.

இதைக் கேட்டதும் அதிகாரிகள் கலகலவென சிரித்து விட்டனர். ஆர்.டி.ஓ. சங்கீதா சாமியாரை பார்த்து சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் எல்லாம் தீயவர்களா.... என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்றார்.

இதற்கு சாமியாரும் சளைக்கவில்லை. "ஆமாம் சுனாமியால் செத்தவர்கள் எல்லோரும் தீமை செய்தவர்கள் என்பது என் கருத்து என்றார். இதையடுத்து பூஜையில் மர்மம் இருப்பதை உணர்ந்த ஆர்.டி.ஓ. சங்கீதா காளி பூஜைகள் குறித்து உரிய விசாரணை நடத்துங்கள் என்று அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் உத்தரவிட்டார்.

காளிபூஜை அறை சோதனைக்குப் பிறகு ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று ஆர்.டி.ஓ. பார்த்தார். அங்குள்ள சுகாதார சீர்கேடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

ஆதரவற்ற குழந்தைகளை தான் அருகில் அழைத்து ஆர்.டி.ஓ விசாரித்தார். எப்படி இந்த ஆசிரமத்துக்கு வந்தீர்கள்? என்று விசாரித்தார். அப்போது ஆதரவற்ற சிறுவர்- சிறுமிகளில் பெரும்பாலானவர்களை பொன்னேரியைச் சேர்ந்த ஒரு சமூக சேவகி அழைத்து வந்து ஆசிரமத்தில் ஒப்படைத்து இருப்பது தெரிய வந்தது.

ஆதரவற்ற குழந்தைகள் பற்றி கணக்கெடுக்க உத்தரவிட்ட ஆர்.டி.ஓ. பிறகு முதியோர் இல்லத்துக்கு சென்றார். அங்கு வயதானவர்கள் மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சில முதியவர்களை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

இதைப்பார்த்து ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக அந்த முதியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

முதியவர்களில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்பதும் ஆர்.டி.ஓ. நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மனநலம் பாதித்தவர்களுக்கு ஏன் சரியான டாக்டரிடம் சிகிச்சை கொடுக்கவில்லை என்று ஆர்.டி.ஓ. கேட்டபோது சாமியாரால் பதில் சொல்ல முடியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர்களையும் பொன்னேரி சமூக சேவகிதான் ஆசிரமத்தில் சேர்த்து விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இளம்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறை எங்குள்ளது என்ற கேட்ட ஆர்.டி.ஓ அங்கு சென்று பார்த்தார். அங்குள்ள ஒரு அறையில் 3 இளம்பெண்கள் இருந்தனர். "அவர்கள் யார்? பெயர் என்ன? எந்த ஊர்? எதற்காக ஆசிரமத்தக்கு வந்தீர்கள்? இங்கு சேர்த்து விட்டது யார்?'' என்று ஆர்டிஓ கேள்விகளால் துளைத் தெடுத்தார்.

இதில் சில பெண்கள் குடும்ப வறுமைகாரணமாக ஆசிரம வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இளம் பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறை சுவரில் சிறு ஓட்டை ஒன்றிருந்தது. அது வாளி வைத்து மறைக்கப்பட்டிருந்தது. அதை சோதனையில் கண்டு பிடித்த ஆர்டிஓ "இந்த துவாரம் ஏன் போடப்பட்டுள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு சாமியார் இப்படி எல்லாம் கேட்காதீர்கள் இது காளி சக்தியால் ஏற்பட்ட ஓட்டை'' என்றார். அவரது இந்த பதில் அதிகாரிகளை திகைக்க வைத்தது.

இதன்பிறகு ஆர்டிஓ சங்கீதா ஆசிரம சமையல் கூடத்துக்கு சென்றார். அங்கு 15 இளம்பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நல்ல உடையில் பார்க்க அழகாக "பளிச்'' சென இருந்தனர்.

"ஆசிரமத்தில் என்ன செய்கிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அந்த பெண்கள் 11-ம்வகுப்பு படிக்கிறோம்'' என்றனர்.

"எந்த பள்ளியில் படிக்கிறீர்கள் என்று ஆர்டிஓ மடக்கினார். அதற்கு அந்த இளம் பெண்கள் "ஆசிரமத்தில் உள்ள பள்ளியில்தான் படிக்கிறோம்'' என்றனர். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது உடனே அதிகாரிகளுக்கு புரிந்து விட்டது.

ஏனேனில் ஆசிரமத்தில் உள்ள பள்ளிக்கூடம் 1 முதல் 5-ம்வகுப்பு வரை மட்டுமே அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடமாகும். எனவே 11-ம்வகுப்பு படிப்பதாக அந்த பெண்கள் சொன்னதை ஆர்டிஓ ஏற்கவில்லை.

அந்த இளம் பெண்களிடம் "உங்கள் பெயர் என்ன என்று ஆர்டிஓ கேட்டார். ஆனால் அந்த 15 இளம் பெண்களும் பெயரை சொல்ல தயங்கினார்கள். "அதை சுவாமிஜியிடம்தான் கேட்க வேண்டும்'' என்றனர்.

இது ஆர்டிஓ சங்கீதாவுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர், "இந்த 15 இளம் பெண்களும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ஆசிரமத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' என்று முழு அளவில் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த 15 இளம் பெண்களிடமும் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து ஆசிரமத்தில் ஒரு தனி அறை பூட்டி கிடப்பதை பார்த்த ஆர்.டி.ஓ. சங்கீதா அதை திறக்க உத்தரவிட்டார். அந்த அறையை திறந்த போது அங்கு வயதான பெண்ணும், இளம் பெண்ணும் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் 2 பெண்களை அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சாமியார் கூறினார்.

உடனே ஆர்.டி.ஓ. அந்த இளம் பெண்ணிடம் பேசினார். ஆனால் அந்த பெண் தெளிவாக பேசினார். தனது சொந்த ஊர் செங்குன்றம் என்றும் கணவர் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு இங்கு வந்து விட்டேன்'' என்றார்.

"ஆசிரமத்தில் உனக்கு என்ன வேலை'' என்று ஆர்.டி.ஓ. கேட்க, அதற்கு அந்த "பெண் சுவாமிஜிக்கு சேவை செய்கிறேன்'' என்றார்.

அந்த பெண்ணின் பதில் ஆர்.டி.ஓ.வுக்கு திருப்தி தரவில்லை. சாமியார் பக்கம் திரும்பிய அவர், "ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிவந்து விட்டால் அது பற்றி அவள் கணவனுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? அல்லது காவல் நிலையத்திலாவது சொல்லி இருக்க வேண்டுமே? என்றார்.

இதை கேட்டதும் சாமியார் ஆவேசம் அடைந்தார். நான் யார் என்ன என்று பார்க்கமாட்டேன். ஆசிரமத்தில் காளி சேவை செய்ய வரும் எல்லாரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வேன்'' என்றார்.

அதிகாரிகள் "இது தவறு'' என்று சுட்டிக்காட்டிய போது, சாமியார் தன் வாதத்தில் இருந்து மாறவில்லை. "இங்கு இருப்பவர்கள் காளி சேவை செய்பவர்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுவார்கள். இதையெல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்றார்.

சாமியார் பதில்கள் ஏடாகூடாமாக வந்ததும், "சரி, உங்கள் ஆசிரமத்தில் மொத்தம் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?'' என்று ஆர்.டி.ஓ. கேட்டார். அதற்கு சாமியார் 250 பேர் என்றார்.

உடனே ஆர்.டி.ஓ. "அதை எனக்கு அதிகாரப்பூர்வமாக எழுதித்தாருங்கள்'' என்றார். இதை கேட்டதும், "250 பேர் இல்லை. 195 பேர்தான்'' என்றார்.

அவர்களில் இளம் பெண்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு சாமியார் "இருபது'' என்றார். அவர்களது பெயர் மற்றும் முகவரி விவரங்களை சொல்ல சாமியார் மறுத்து விட்டார்.

அதோடு ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்கள் தகவல்களை எழுதி தர கால அவகாசம் வேண்டும் என்றார். அதிகாரிகள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. சங்கீதா 11.15 மணிக்கு ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆர்.டி.ஓ. சங்கீதா "மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

ஆசிரமத்தின் அனைத்து பகுதியிலும் சோதனை நடத்தினேன். ஆசிரமம் முழுமையாக சீர்கேடுடன் உள்ளது. சுகாதாரம் என்பதே இல்லை. ஆசிரமத்தில் எந்த கணக்கும் முறையாக முழுமையாக இல்லை. இங்கு தங்கி இருக்கும் பெண்கள் எங்கு இருந்து வந்தனர்? எதற்காக, எப்படி வந்தனர்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்த உள்ளோம். அதன் பிறகு ஆசிரமம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஆர்.டி.ஓ. சங்கீதா கூறினார்.

சாமியார் சொன்ன தகவல்களை சோழவரம் பகுதி மக்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன் கூறியதாவது:-

அடுத்தடுத்து 10 பேர் உடல்கள் ரகசியமாக புதைக்கப்பட்டதால் மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில்தான் நாங்கள் போலீசில் புகார் செய்தோம்.

ஆசிரமத்தில் இறந்தவர்கள் பற்றி கணக்கில் காட்டாமல் புதைத்ததால் சந்தேகம் நீங்கவில்லை. எனவே பிணங்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன் கூறினார்.

புதைக்கப்பட்ட 10 உடல்களை தோண்டி எடுப்பது பற்றி போலீசார் இன்று முடிவு செய்கிறார்கள்.

தகவல்

No comments: