Tuesday, 5 December 2006

Srilanka

கட்டியம் கூறும் "கைங்கரியம்'!
இனப்பிரச்சினை விவகாரத்தில், சமாதானத்திற்கான கதவை இறுக்கிப் பூட்டிவிடுவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மிக வேகமாக மேற்கொண்டு வருகிறது. அது விடயத்தில் அரசிடம் வேகம் மட்டுமின்றி தீவிரமும் அளவு மீறிய ஆவேசமும் காணப்படுகின்றன.சமாதானப் பேச்சுகளின் அனுசரணையாளரான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஹன்சன் போவரின் உத்தேச கிளிநொச்சி விஜயத்தைத் தடுத்து வைத்திருக்கின்றது அரசு. அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசுதான். விடுதலைப்புலிகள் அல்லர்; உண்மையே. அந்த அதிகாரத்தனத்துடன், இறுமாப்புடன் அனுசரணையாளர் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது. இது எந்த வகையிலும், என்ன காரணம் கொண்டும் ஏற்புடையதல்ல.அரசுக்கு விருப்பமானால் மட்டும் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் அனுசரணையாளரைக் கிள்ளுக் கீரையாகக் கருதிச் செயற்படுவதும், அவர்கள் மீது சட்டாம்பிள்ளைத் தனத்தைக் காட்டுவதும் மிகவும் வெறுக்கத்தக்கது; அநாகரிகமானது.முடிவில்லாமல் நீண்டு சென்றுகொண்டிருந்த போரை நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே, மதிப்பார்ந்த அனுசரணைப் பணியை நோர்வே ஏற்றுக்கொண்டது. அதற்கான சுயநலமான காரணங்கள் இருக்கலாம்; இல்லாது விடலாம். அது வேறு விடயம் அனுசரணைப் பணியின் பெறுமதியை சற்றும் உணராமல், ராஜதந்திர ரீதியான உரிய மதிப்பளிக்காமல், சமாதானத் தூதுவர் போவரை கிளிநொச்சிக்குச் செல்லவிடாமல் தடுத்ததை அரசு எந்த வகையில் நியாயப்படுத்தப் போகின்றது?போவர், தாம் திட்டமிட்ட நாளில், கிளிநொச்சிக்குச் சென்றால் அவருக்கு உயிராபத்து வந்துவிடும் எனக் கருதியா, அரசு அவ்வாறு நடந்துகொண்டது? விடுதலைப் புலிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் போவரின் கிளிநொச்சி விஜயத்திற்கும் என்ன தொடர்பு?நூலிழையில் அசைந்து கொண்டிருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காகவே சமாதானத் தூதுவர் இந்த நாட்டுக்கு வந்தார்.அது அவரின் கடமை; அனுசரணையாளர் என்ற வகையிலான பொறுப்பு.தன்னுடன் தொங்கிக்கொண்டிருக்கும் இனவாத கடுங்கோட்பாட்டாளர்கள் விரும்புவது போன்று, நோர்வேயை அனுசரணைப் பணியில் இருந்து நீக்க வேண்டும், துரத்திவிட வேண்டும் என்று அரசு விரும்பினால், அதனை வெளிப்படையாகச் சொல்வது தானே.நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்கு ஆளான சமாதானப் பேச்சை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்வதற்கும்சமாதானத் தூதுவர் அதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கும் என்ன சம்பந்தம்; ஏது தொடர்பு? விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன என்று நேரில் சென்று அறிவதற்கு அனுசரணையாளரான அவருக்கு உரிமை இல்லையா? சமாதானப் பேச்சுக்களை முடித்துக்கொள்வதற்காக விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதாகவோ அல்லது பயங்கரவாதச் தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டு வருவதாகவோ அரசாங்கம் நாளை புதன்கிழமை நிச்சயமாகவே முடிவு எடுக்குமாயினும் கூட, அதற்கு முதல் போவர் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதால் குந்தகம் எதுவும் ஏற்பட்டு விடாதே! தீர்மானிக்கப் போவது இலங்கை அரசாங்கம் தானே; நோர்வேயோ அல்லது போவரோ அல்லவே!ஹன்சன் போவரை கிளிநொச்சி செல்லாது தடுப்பதற்கு தர்க்கரீதியான காரணம் தான் எதுவும் அரசிடம் உண்டா? நோர்வேயை அதன் விசேட தூதுவரை இவ்வாறு அவமரியாதையாக நடத்தினால், அனுசரணைப்பணி யிலிருந்து அது தானாகவே விலகிவிடும்.அப்போது அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தீவிரவாத சக்திகளையும் போர் விரும்பிகளான தென்னிலங்கையின் எண்ணிக்கையில் குறைந்த சிறிய கூட்டத்தினரையும் சாந்தப்படுத்திக்கொள்ளலாம் என்று அரசாங்கம் கருதியதா?நோர்வேயை அதனது பணியிலிருந்து வெளியேற்றி, போர் வெறியைத் தனித்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உள்ளூர நினைத்தால், நோர்வேயின் பணி தேவையில்லை என்று வெளிப்படையாகக் கூறி விடை கொடுக்கலாமே!நாட்டில் மீண்டும் போரை நடத்தி, மக்களையும் அதனையும் குட்டிச்சுவராக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுவிட்ட அரசை, நோர்வேயினால் தடுக்க முடியுமா என்ன? ஒவ்வொருவரும் தத்தமது விதியை அல்லது வினையை தாமே தமக்குள் விதைக்கிறார்கள். வெளியார் அல்லர்!அரசு தனது விதியை தானே நிர்ணயித்துக்கொள்ளலாம். நன்னோக்கத்துடன் உதவ வந்த நோர்வோயினதோ அல்லது வேறு தரப்புகளினதோ விதிகளை அல்ல.இனப்பிரச்சினைக்குப் பேச்சுக்கள் ஊடாகவே தீர்வு காணப்படும். போரின் மூலம் அல்ல என்ற "" மஹிந்த சிந்தனை''யுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இப்போது யுத்தத்தின் மூலம் தீர்வுகாண உத்தேசித்து விட்டார் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கிறது, சமாதானத் தூதுவர் போவரின் கிளிநொச்சி விஜயத்தை தடுத்து நிறுத்திய பெரும் ""கைங்கரியம்''!

உதயன்

No comments: