இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மீனவர்கள் மீதும் புலிகள் தாக்குதல்
[05 - December - 2006]
அரச படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கல்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு தீவுப் பகுதிக்கு வடக்கே கதிரமலை முனையை அண்டிய கடற்பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கத்துடன் வந்த கடற்புலிகள் பிரிவினர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகுகள் மீதும் தாக்குதலை நடத்தியதாகவும் இதனால் ஒரு மீனவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கதிரமலை முனைக்கடல் பிரதேசத்தில் கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப அன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர்கள் வழமைபோல் கதிரமலை முனைக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென்று கடற்புலிகள் இயக்கத்தினரின் மூன்று தாக்குதல் படகுகள் உட்பட 18 படகுகளில் வந்த கடற்புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மீன்பிடிக்கென வழமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளைத் தாக்கியதுடன் வலைகள், உபகரணங்களையும் அறுத்தெறிந்து கொண்டு சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகள் இயக்கத்தினரின் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு மீனவர் அங்கேயே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளானதாகவும் தொடர்ந்து மீனவர்கள் இழப்புகளுடன் அங்கிருந்து தப்பியோடி வந்து விட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பியோடி வருகையில் அவர்கள் கடற்புலிகளின் இந்தத் தாக்குதல் பற்றி பத்தலங்குண்டு தீவு கடற்படையினருக்கு அறிவித்ததுடன் பின்னர் கல்பிட்டி கடற்படை முகாமுக்கும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கல்பிட்டி கடற்படையினர் மோட்டார் ஜெற் தாக்குதல் படகுகளில் கடற்புலிப் படகுகள் காணப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றபோது அவர்களுடைய படகுகள் கதிரமலை கடற்கரைப் பிரதேசத்துக்குத் தப்பியோடிவிட்டன. ஆயினும், கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் சேதங்களுக்குள்ளாகின. மேலும் கடற்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகளையும் அதிலிருந்த மீனவர்களையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது விமானப் படையினரின் தாக்குதல் விமானங்களும் கடற்படையினருக்கு உதவியாகச் சென்றபோதும் அப்பகுதியில் கடற்புலிகள் இயக்கத்தினரின் படகுகளுடன் மீனவர்களின் படகுகளும் நிறுத்தப்பட்டிருந்ததால் விமானத் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என விமானப்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடற்புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஒரு மீனவரைத் தவிர படுகாயமடைந்த மீனவரை கடற்படையினர் அவசர சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் உடனே அனுமதித்துள்ளனர். -
திவயின: 01.12.2006 -
தினக்குரல்
Tuesday, 5 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment