Tuesday, 5 December 2006

இவள்

குடும்ப வன்முறை தடைச் சட்டத்திற்கான அவசியம் எமது நாட்டில் ஏற்படவில்லை

பெண்கள் மீதான பல வன்முறைகள் எமது நாட்டிலும் பரவலாக உள்ள போதிலும் குடும்ப வன்முறைகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் இங்கு அரிதாகவே உள்ளனர். சமூகக் கண்ணோட்டத்தில் வன்முறைகளாகக் கருதப்படாதளவு வன்முறைகளை பெண்கள் மீது குடும்பங்கள் செலுத்துகின்ற அடக்கு முறைகளாக இருக்கின்றன. இச்சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடும் போது, எமது நாட்டில் குடும்ப வன்முறைகள் அத்தனை கொடூரமானவையாக இல்லை. பெண் சிசுக் கொலை முதல், பெண் மீது தீயிட்டுக் கொல்லுதல் போன்ற நிகழ்வுகளை தரிசிக்க முடிவதில்லை என்பது மிகவும் முன்னேற்றகரமான அம்சம் என்றே நாம் பெருமிதம் கொள்ளலாம். எமது பெண்களிலும் சிறுபகுதியினர் பல்வேறுபட்ட வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றமையும் குடும்ப நன்மை கருதி அவற்றை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதும் சாத்தியமே. எனினும் இங்குள்ள பெண்களின் கல்வி நிலையும் விழிப்புணர்வும் குடும்ப வன்முறைகளை அசாத்தியமாக்குகின்றன அல்லது குறைக்கின்றன.
சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றபோதிலும் வெறும் சட்டங்களால் மட்டும் சமுதாயத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக சட்ட ஒழுங்குகள் கேலிக்குரியதாக மாறி வருவதை நாம் அறிவோம். விலங்குகளுக்கிருக்கிற பாதுகாப்பு கூட மனித உயிர்களுக்கில்லை. பட்டப்பகலில் நட்டநடு வீதியில் வைத்து கொலை செய்துவிட்டுத் தப்பிப் போகின்ற கொடூரம் குடிகொண்டுள்ள தேசத்தில் சட்டம் இருந்து தானென்ன, இல்லாமல் போனால் தான் என்ன? இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையாரின் அற்புதமான கவிவரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - எவ்வளவு நிஜமான கவி வரிகள்!

எமது நாட்டிலும் பெண்களுக்கெதிராக பல வன்முறைகள் குறிப்பாக பாலியல் வன்முறைகள் சிறுமிகள் முதல் மூதாட்டிவரை நிகழ்த்தப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக போர்ச் சகதிக்குள் அமிழ்ந்து போயிருக்கும் எங்கள் தேசத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் வகை தொகையின்றி சிறியளவு முதல் வன்கலவிகொலை வரை தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இவ்வாறான செயல்களுக்கு எதிராக சட்டங்களிருந்தும் கூட இவற்றைத் தடுக்க முடிந்ததா?.. குற்றவாளிகள் இனம் காணப்பட்டார்களா? இனம் காணப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?

இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடினால் சட்டம் வெறும் கேலிக் கூத்தோ என்ற சந்தேகமே எழுகிறது.

எமது பெண்கள் மீது வீட்டுக்கு வெளியே நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளோடு ஒப்பிடுகையில், குடும்ப வன்முறைகள் கொடூரமானதாக இல்லை. தூசிப்பதும், அடித்துத் தாக்குவதும் குடித்துவிட்டு வந்து அவமானப்படுத்துவதும், கணவர்கள் வன்கலவி புரிவதும் நாம் தரிசிக்கின்ற குடும்ப வன்முறைகள் தெரிந்தோ, தெரியாமலோ மனித நாகரிகம் என்ற அலகை ஏற்றுக்கொண்டு விட்டது. குடும்பம் என்ற இந்தக் கட்டமைப்பில் ஆணின் கையிலேயே அதிகாரம் குவிந்துபோயுள்ளது. அதேநேரம் சர்வ அதிகாரமும் அவனிடமே என்றும் கூறிவிட முடியாது. சில குடும்பங்களில் பெண்களே ஆதிக்கம் செலுத்துவதை காண முடிகிறது. இவ்வாதிக்கம் அன்பினாலும் சில சந்தர்ப்பங்களில் பெண்ணின் ஓங்கிய நிலையினாலும் எட்டப்பட்டுள்ளது.

எமது நாட்டில் உடல், வார்த்தை, உணர்ச்சி, பாலியல், பொருளாதார அவமதிப்புகளாகியன குடும்ப வன்முறைகளாகப் பரவலாக இருக்கின்ற போதிலும் குழந்தைப்பேறு இல்லை என்பதற்காகவோ ஆண்வாரிசு பெற்றுத்தரவில்லை என்பதாலோ குறை கூறலும் வதைப்பதும் குறைவாகவே உள்ளன. விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் பரவலாகி கிராமிய மட்டங்களில் கூட தெளிவை ஏற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனலாம். மேற்கூறிய குறைபாடுகளுக்கு இருபாலாரும் காரணமாக இருக்கலாம் என்பதை அநேகர் உணர்ந்துள்ளனர். அடுத்தடுத்து பெண்குழந்தை பிறந்தால் கவலைப்படும் பெற்றோர்கள் இருப்பினும் சிசுக்கொலை, பெண்சிசுவைக் கருவில் அழித்தல் என்பன இடம்பெறுவதில்லை. விதவைகள் கூட்டுக் குடும்பத்துள் சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போதிலும் கொடுநாச யுத்தம் ஏற்படுத்திய விதவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் பொதுவாக விதவைகளின் மீது அனுதாப அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது. பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் ஓரளவு குறைந்துகொண்டு வருகின்ற இவ்வேளையில் சும்மாயிருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதாய் நாம் அவசரப்பட்டு குடும்ப வன்முறைச் சட்டத்தை அமுலாக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

எமது தமிழ்ப் பிரதேசங்களில் இந்தியாவைப் போலன்று திருமணத்தின் பின்னர் பெண்கள் மாமனார் வீட்டிற்குக் குடிபோவதில்லை. பதிலாக ஆண்களே பெண்ணின் வீட்டில் வாழப்போகிறார்கள் அல்லது தனிக் குடித்தனம் போகிறார்கள். இதனால் பெண்ணுக்கு பாதுகாப்பு அதிகம் கிடைக்கிறது. இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் எடுத்தெறியப்படுகின்ற சமயங்களும் அவதானிக்கப்படுகிறது.

காலம் காலமாக பெண்கள் மீது குடும்ப அளவிலேயே செலுத்தப்படும் வன்முறைகளை அண்மைக்காலமாக ஏற்படுத்துப்பட்டு வரும் மனமாற்றங்களால் ஓரளவு தணிக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறோம்? வெளியே இடம்பெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சட்டத்தினால் இன்றும் கூட முற்று முழுதாகத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டோமானால், இப்போது இப்படியான புதிய ஒரு சட்டத்தை கொண்டு வருவது அவசரமில்லை என்பது புரியும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் அமுல்படுத்தப்படும் சட்டங்களில் பெண்ணிற்கு அதிக பாதுகாப்பு உண்டு. பாலியல் வன்கலவிக்கு நேரடி கண்கண்ட சாட்சிகள் அவசியமில்லை. சிறுவர் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வன்கலவி உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை. காதலித்து கலவி கொண்டு ஏமாற்றினால் கூட தண்டனைகள் உண்டு. சீதனப் பணம் வாங்குவது கூட தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. அப்போது தாயகப் பிரதேச நீதிமன்றங்களில் கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. எனினும், குற்றங்கள் தொடரவே செய்கின்றன. சீதனம் வாங்கும் முறை கொஞ்சமும் குறைந்ததாக இல்லை.

இன்று எமது நாட்டு பெண்களின் அவல நிலைக்கு கொடிய யுத்தம் முக்கிய காரணம். இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டியதே முக்கிய கடப்பாடாக உள்ளது. குடும்பத்துள் நிலவும் பால் ரீதியிலான வன்முறைகள் இனம் காணப்பட்டு சுமுக தீர்வுகளை எட்ட வேண்டும். குடும்ப அலகு கட்டிக்காக்கப்படுவது இன்றைய சமூகத்தில் முக்கிய அம்சம். பிள்ளைகளின் வளமான எதிர்காலமும் கணவன், மனைவி சுமுக உறவில் பெரிதும் தங்கியுள்ளன. புதிய சட்டம் குடும்ப உறுப்பினரிடையே குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. அடுத்து இச்சட்டம் கொண்டுவரப்படுமானால், எத்தனை பேர் இதன் பயனை நாடுவர் என்பது கேள்விக்குறியே. பிரச்சினைகள் மேலும் சிக்கலாகிவிடும் என்பதால் பல குடும்பப் பெண்கள் இதை நாடமாட்டார்களென்றே நினைக்கிறேன். தாங்க முடியாத வன்முறைகள் எதிர்கொள்ளப்படின் இறுதி ஆயுதமாக விவாகரத்தை நாடலாம். மற்றும் படி சமூக ரீதியிலான மனமாற்றமே உகந்த தீர்வாகும்.

நான் இவ்வாறு கூறுவதை, குடும்ப வன்முறையை ஏற்றுக் கொள்ளாதவளென்றோ, அவை தடுக்கப்பட வேண்டும் என்பதை மறுப்பவளென்றோ தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். குடும்ப வன்முறைகள் பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படல் அவசியம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய விவகாரமே!

தினக்குரல்

No comments: