Tuesday, 5 December 2006

Srilanka

புலிகளின் தலைவர்களுக்காக வாகனம் கடத்திய வைத்திய கலாநிதி

[05 - December - 2006]

சிங்கள இனத்தவரான வைத்தியக் கலாநிதி ஒருவரையும் மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜா-எல பிரதேசத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
புலிகள் இயக்கத்துக்கு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களை வழங்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் ஒருவரிடம் விசேட புலனாய்வு விசாரணைக் குழுவினர் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் போது அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மேற்படி சிங்கள வைத்திய கலாநிதியும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும் இவ்வாறு ஜா - எலவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னர் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜரும் சிங்கள இனத்தவரே எனவும் இவரிடம் மேலும் பெறப்பட்ட தகவல்களிலிருந்து ஜா-எலவில் கைது செய்யப்பட்ட சிங்கள வைத்தியரும், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும் நெடுங்காலமாகவே இவ்வாறு அடிக்கடி கிளிநொச்சிக்குச் சென்று புலிகள் இயக்க உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளார்கள் என்று வெளியாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கிளிநொச்சியிலுள்ள புலிகள் இயக்கத் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப அங்கிருந்த நான்கு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை அடிக்கடி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்கள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நான்கு நபர்கள் பற்றிய விரிவான புலன் விசாரணைகளைத் தற்போது பொலிஸ் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிங்கள இனத்து வைத்தியரும், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும் புலிகள் இயக்கத் தலைவர்களின் பாவனைக்காக ஆடம்பர வாகனங்களைத் தெற்கிலிருந்து கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரத்தில் நெடுங்காலமாக ஈடுபட்டிருந்ததாகவும் இவ்வாறு கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு ஆடம்பர வாகனங்களை கொண்டு செல்வதற்காக புலிகள் இயக்கத்திடமிருந்து இலட்சக் கணக்கான பணத்தை அவர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை முன்னர் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜரிடம் பெறப்பட்ட மேலதிக தகவல்களைத் தொடர்ந்து மேலும் நான்கு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இராணுவ வீரர்களும் இராணுவ சேவையிலிருந்து தப்பியோடியவர்கள் எனவும் இவர்கள் மேற்படி இராணுவ மேஜருடன் இணைந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் மேலும் தெரிய வந்துள்ளது. அத்துடன் இந்த இராணுவ மேஜர் தலைமையில் இவர்கள் பல நபர்களைக் கடத்திச் சென்று கப்பம் வசூலித்தல், வாகனக் கடத்தல்கள் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

லங்காதீப29/11/2006

தினக்குரல்

No comments: