
* மேலூர் அருகே அதிசயம்
மேலூர்: இரண்டு நாட்களாக உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்து, இறந்த பெண், இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்த போது உயிருடன் மீண்டார். தற்போது முன்பை விட ஆரோக்கியத்துடன் அவர் உலா வந்து கொண்டுள்ளார்.
மேலூர் அருகே ஆட்டுக்குளம் ஊராட்சியிலுள்ள உலகநாதபுரம் காலனியில் வசிப்பவர் அழகர் மனைவி வன்னி(44). இவருக்கு பேச்சி,முத்துராக்கு மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் பேச்சி, முத்துராக்கு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.மற்ற 2 மகள்களும், மகனும் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வன்னிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. அதிலிருந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி நோய்வாய்ப்பட்டே இருந்து வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வன்னியின் உடல்நிலை மோசமானது. தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டே இருந்துள்ளது. உறவினர்கள் இனி வன்னி பிழைக்க மாட்டார் என்றும், துளசி மற்றும் நல்லெண்ணையை கலந்து கொடுத்தால் இழுப்பது நின்று உயிர் பிரிந்து விடும் என்றும் கூறியுள்ளனர். இதன்படி கொடுக்கவே, உயிர் பிரிந்தது.வன்னி இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பலர் மாலைகள் மற்றும் சேலையுடன் சாவுக்கு வந்தவண்ணம் இருந்தனர். பின்னர், பிணத்தை குளிப்பாட்ட முடிவு செய்து வன்னி மீது தண்ணீரை ஊற்றினர். தண்ணீர் மேலே பட்டவுடன், வன்னி கண்கள் இரண்டையும் திறந்து பார்த்துள்ளார்.
இதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மேலூரிலுள்ள டாக்டர் கணேசனிடம் தூக்கி சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படவே வன்னி பிழைத்துக் கொண்டார். சாவிற்கு கொண்டு வந்த மாலைகளை அருகிலுள்ள கோயில் மற்றும் குப்பைகளில் வீசிவிட்டு உறவினர்கள் சென்றனர். தற்போது வன்னி முழு ஆரோக்கியத்துடன் உணவுகளை சாப்பிட்டு, நடமாடி வருகிறார்.
இது குறித்து டாக்டர் கணேசன் கூறுகையில், என்னிடம் வன்னியை தூக்கி வந்த போது அவருக்கு நாடித் துடிப்பு குறைவாக இருந்தது. மூளையில் பாதிப்பு இருந்ததும் தெரிய வந்தது. மிகவும் அபாய நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் தாமதமாக கொண்டு வந்திருந்தாலும் அவர் இறந்து இருப்பார். இவருக்கு டி.பி., நோய் இருப்பதால், அது மூளையை பாதித்து கோமா நிலைக்கு சென்று பின்னர் மீண்டுள்ளார். மருத்துவ துறையில் ஆயிரத்தில் ஒரு கேஸ் இவ்வாறு இருப்பது உண்டு என்றார். மாண்டவர் மீண்டது இக்கிராம மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்
No comments:
Post a Comment