'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு
பேட்டி: சுதா அறிவழகன்
உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன.
நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ணத்தக்க அளவுக்கு அங்கு நிலைமை நெருக்கடியாகி வருகிறது.
இனிமேல் பேச்சே இல்லை, இனி தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு, ஈழத் தமிழர்களை ஒன்று திரட்டி, உலகத் தமிழர்களின் ஆதரவோடு அடுத்த ஆண்டுக்குள் தமிழ் ஈழத்தை அமைப்போம் என பிரபாகரன் முழங்கியிருக்கிறார்.
மறுபுறம், கடலில் கூட்டு ரோந்து செல்வோம், ராணுவ உதவி தாருங்கள், ரேடார் தாருங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்திருக்கிறது இலங்கை. தராவிட்டால் பாகிஸ்தான், சீனா என இந்தியாவின் பகை நாடுகள் பக்கம் தனது பார்வையைத் திருப்பவும் அது தயாராக உள்ளது.
ஈழத்தில் நிலவும் இப்போதைய சிக்கலான சூழ்நிலையும், இந்தியா குறிப்பாக தமிழகத்தின் பங்கு அதில் இப்போது என்ன என்பது குறித்தும், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டும், என்னதான் நடக்கப் போகிறது என்பதையும் விவரிக்கிறார் சுப.வீரபாண்டியன்.
தமிழகத்தின் தமிழார்வலர்களில் மிக முக்கியமான முகம் சுப.வீ. பேச்சில் இனிமை தெறிக்கும், எழுத்தில் நெருப்பு பறக்கும். ஈழத் தமிழர்கள் இன்னல்கள் குறித்து நம்முடன் சுபவீ பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறோம்.
ஈழத்தின் தற்போதைய நிலை?
1950களில் அறவழியிலும், 1970களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை.
மாவீரர் நாளில் உரையாற்றியபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மிகத் தெளிவாகவே சொல்லியுள்ளார். தனி தமிழ் அரசே ஒரே தீர்வு, சரியான தீர்வு என்பதை அவர் சொல்லி விட்டார். இதை இறுதிப் போர் அறிவிப்பாகவே நான் கருதுகிறேன்.
நார்வே மத்தியஸ்தக் குழு கடைசி சமாதான முயற்சியாக வன்னித் தீவுக்குச் சென்று புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கும் முயற்சிக்கும் இலங்கை அரசு முட்டுக் கட்டை போட்டு விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.
இப்போதைய நிலையில், எங்களுடைய நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என்ற ஒன்றை மட்டுமே உலகத்திடமிருந்து புலிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வாய்மொழி ஆதரவையும், உணர்வு வழி ஆதரவையும் தமிழக மக்கள் வழங்க வேண்டும்.
தமிழக மக்கள் ஒரணியில் திரண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு இறங்கி வரும். இந்திய அரசு இறங்கி வந்தால் மட்டுமே, ஈழப் போராட்டத்தில் நியாயம் இருப்பதை, புரிந்தோ அல்லது புரியாமலோ, குறைந்தபட்சம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அப்போராட்டத்திற்கு ஆதரவு தர உலக சமுதாயம் முன்வரும்.
ஈழப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை?
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை வரவேற்புக்குரியதாகவே உள்ளது. ஆனால் அது மட்டும் போதுமானதாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. தற்போது உள்ளதை விட ஆதரவு கூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடந்த கால ஆட்சியில் தமிழ் ஈழத்திற்கு எதிரான மிகக் கடுமையான நிலை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு ஏறத்தாழ வெளிப்படையாகவே ஆதரவு தருகிறது. சட்டசபையில், ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே இதற்குச் சான்று.
செஞ்சோலை படுகொலைச் சம்பவமாகட்டும், மட்டக்களப்பு படுகொலைச் சம்பவமாகட்டும், தமிழக முதல்வர் கண்டித்துக் குரல் கொடுத்துள்ளார். இதை ஒரு நல்ல தொடக்கமாகவே நான் பார்க்கிறேன்.
தனித் தமிழ் ஈழம் அமைவதை வரவேற்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், தமிழர்களுக்குத் தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சியே என்பதை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். அதேசமயம், அனைவருக்கும் ஏற்புடைய தீர்வு உண்டானால் அதை விட மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.
தீர்வு ஏற்படும் வரை தமிழர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
நார்வே குழுவின் சமரச முயற்சிகள்?
நார்வே குழுவின் முயற்சிகள் நம்பகத் தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே என்பதே அது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையே ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைதான். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
முக்கியச் சாலையான ஏ9 நெடுஞ்சாலையைத் திறக்க இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவே இல்லை. இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான கதவை இலங்கை அரசு மூடி விட்டது. இரு தரப்பிலும் இனி பேச்சுவார்த்தையே இருக்காது என்றே நான் நம்புகிறேன்.
இரு தரப்பும் இறுதிப் போருக்குத் தயாராகி விட்டன என்றுதான் நான் கருதுகிறேன்.
சிவசங்கர மேனன், நாராயணன் ஆகியோரின் பங்கு?
முன்பு ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.தீக்ஷித் போன்ற அதிகாரிகளும், இப்போது சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்ற அதிகாரிகளும் ஈழப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டனர்.
சிவசங்கர மேனனும், நாராயணனும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பண்டாரி, தீக்ஷித் கூறிய யோசனைகளைக் கேட்டுத்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தவறான முடிவை எடுத்தார்.
அதிகாரிகள் என்னதான் அரசுகளுக்கு அறிவுரை சொன்னாலும், மக்கள் எழுச்சி பேரலைக்கு முன்பு, இந்த திசை திருப்பும் செயல்கள் நீண்ட நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியாது.தி தமிழர் ஆதரவு அதிகாரிகளான ஜி.பார்த்தசாரதி போன்றவர்களை இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுத்துவது நல்லது என கருதுகிறேன்.
அதிகாரிகள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளை முடிவு செய்யும் வேலையை அவர்கள் செய்யக் கூடாது.
கருணாநிதியை தூது அனுப்பினால் சாதிக்க முடியுமா?
முதல்வர் கருணாநிதியால் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாது. இந்திய அரசை மட்டுமே கருணாநிதியால் நிர்ப்பந்திக்க முடியும். அதை கருணாநிதி செய்ய, கட்சி பேதமின்றி தமிழகத்தில் உள்ள அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு, அந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்த துணை புரிய வேண்டும்.
மற்றப் பிரச்சினைகளைக் கூட பிறகு வைத்துக் கொள்வோம். ஆனால் ஈழப் பிரச்சினையில், எல்லோரும் ஒன்றுபட வேண்டும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் கூட இந்த இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை வரவேற்கிறேன்.
ராஜபக்ஷேவின் கூட்டு ரோந்து யோசனை?
இது இந்தியாவை மீண்டும் இப்பிரச்சினைக்குள் இழுக்க ராஜபக்ஷே தீட்டிய சதி. எப்படியாவது இந்தியாவை ஈழப் பிரச்சினைக்குள் இழுத்து விட வேண்டும் என்று நினைத்தே அவர் அப்படி ஒரு யோசனையைக் கூறினார். ஆனால் இந்தியா புத்திசாலித்தனமாக கூட்டு ரோந்து முடியாது என்று கண்டிப்பாக கூறி விட்டது.
இலங்கையின் இறையாண்மையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று கூறும் இலங்கை அரசு, இந்தியாவுடன் கூட்டு ரோந்து மேற்கொள்வது மட்டும் எப்படி அந்நாட்டு இறையாண்மையில் தலையிடுவது ஆகாது என்று கருதுகிறது என்று தெரியவில்லை.
இந்தியாவுக்கு ராஜபக்ஷே மேற்கொண்ட பயணம் ஒரு மாபெரும் தோல்விப் பயணம் என்பதே எனது கருத்து.
தனி ஈழம் தவிர்த்த வேறு திட்டங்களை புலிகள் ஏற்பார்களா?
முழு சுயாட்சி கொண்ட தன்னாட்சி திட்டம் ஒன்றை புலிகள் ஏற்கனவே தெளிவாக பரிந்துரைத்தனர். ஆனால் அதுகுறித்து விவாதம் நடத்த இலங்கை அரசு தயாராக இல்லை.
தனித் தமிழ் ஈழம் தவிர்த்து, விடுதலைப் புலிகளால், ஈழத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வேறு எந்தத் தீர்வு ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.
ஈழப் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் பங்கு?
கடந்த காலத்தில் ஈழப் பிரச்சினையில் கடும் போக்கை கடைப்பிடித்த அதிமுக இப்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது. இது வரவேற்புக்குரியது.
மதிமுக முன்பை விட தீவிரமாக இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்து வருகிறது. அதற்கு முரணாக கூட்டணிக் கட்சியான அதிமுக கருத்து தெரிவிக்காமல் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
போபாலில் ராஜபக்ஷே தொடங்கி வைத்த மேயர்கள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மேயர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். புறக்கணிப்பு என்ற நேரடியான காரணத்தையே அவர்கள் சொல்லியிருக்கலாம். இருப்பினும் இந்த 6 மேயர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இப்போது முன்பை விட மிகப் பெரிய அளவில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான நிலை காணப்படுகிறது. திமுக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பேசி வருகிறது. அதேபோல ஈழப் பிரச்சினை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மதிமுகவைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறன் மீது கூட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வழக்கு போடப்படவில்லை. ஏ.கே.47 ஏந்தி தனித் தமிழ்நாட்டை உருவாக்கத் தயங்க மாட்டோம் என்று கூறியதாகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எனவே, தமிழகத்தில் ஈமிழத் தமிழர்களுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கும் நிலை உள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்றார் சுப.வீரபாண்டியன்
Thatstamil
Monday, 11 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment