Tuesday, 12 December 2006

செவ்வாய் 12-12-2006 18:15 மணி தமிழீழம் [முகிலன்]

அன்பான சொந்தங்களே.....
மட்டக்களப்பு
12.12.2006

அன்பான சொந்தங்களே!

எல்லாப் பேருக்கும் வணக்கம். எல்லாரும் சுகமாக் கிடக்கோணும் எண்டு தான் நான் நெடுகிலும் கையெடுத்து கும்பிடுற பாருங்க. ஆனா நாம நெனக்கிற மாதிரியா எல்லாம் நடக்குது? நாங்க நெனக்கிறது நடக்காமப் போறது வேற. ஆனா நாட்டு ஜனாதிபதி நெனக்கிறது கூட நடக்காமப் போகுது. வாகரயில இரிக்கிற நம்மட சனங்களுக்கு உணவுச்சாமான் அனுப்ப வேணுமெண்டு மகிந்தரய்யா சரியாக் கஸ்ரப்பட்டாராம். ஆனா அவரு சொல்றதக் கூட மாங்கேணியில இரிக்கிற ஆமிக்காறனுகள் கேக்கிறானுகள் இல்லயாம்.

உண்மயில மாங்கேணியில என்ன நடந்ததெண்டு விசயம் தெரிஞ்ச ஒராளிட்டக் கேட்டன் பாருங்க. அவரு சொன்னாரு.. ஆமிப்பெரியவனுகள் சாப்பாட்டுச்சாமான் கொண்டு போக அனுமதி குடுக்கிற மாதிரிக் குடுப்பானுகளாம். அத நம்பித்து நம்மட ஆக்கள் லொறியளோட மாங்கேணிக்குப் போவாங்களாம். மாங்கேணிக் கேம்புக்குள்ள நிக்கிற ஆமிக்காரனுகளும் ஒட்டுப்படைக்காரனுகளும் சேந்துத்து ரெண்டு மூண்டு குண்டக் கேம்புக்குள்ள அடிப்பானுகளாம். அடிச்சுப் போட்டுப் புலியள் எங்களுக்கு அடிக்கிறானுகள் நாங்களும் திருப்பி அடிக்கிறம் எண்டு சொல்லி வாகரைக்குச் செல் அடிப்பானுகளாம். லொறியளோட நம்மட ஆக்கள் துண்டக்காணம் துணியக்காணம் எண்டு அடிச்சிப் புடிச்சிக் கொண்டு திரும்பி வாறதாம்.

ஜனாதிபதிதானாம் முப்படத் தளபதி எண்றாங்க. ஆனா அந்தத் தளபதி சொல்றதயும் இந்த ஆமிக்காறனுகள் கேக்க மாட்டானுகளாம். சிறிலங்காவ உட்டா வெறெந்த நாட்டுலயும் இப்பிடியான திருகுதாளமும் தெப்பிராட்டியமும் நடக்காது பாருங்க.

ஒரு மாசத்துக்கு மேல வாகரைக்குச் சாப்பாடு ஒண்டும் போகல்ல. அடுத்த நேரச் சாப்பாட்டுக்கு என்ன செய்யிற எண்டு தெரியாம நம்மட ஆக்கள் குடும்பம் குடும்பமாக் கூடித்திருந்து மாங்காயும் தேங்காயும் திண்டதக் கேள்விப்படக்குள்ள வகுறு பத்தி எரியுது. இல்லெண்ட இழுபறிக்குப் பொறகு இப்பதான் லொறியில ஒள்ளம் போல சாமான் போயிரிக்கி. போன சாமான் அவ்வளவும் அங்க இரிக்கிற சனத்துக்கு ஒரு கிழமைக்குக் கூட காணாதாம். இதவிட நம்மட புள்ளத்தாச்சிப் பொம்புள ஒண்ட புள்ளப்பொறு வசதியில்லாம ரவுணுக்குக் கொண்டு போக ஆமிக்காறனுகளிட்ட அனுமதி கேட்டதாம். அவனுகள் உடமாட்டன் எண்டுத்தானுகளாம். பொறகென்ன.. அங்கயே அந்தப் பொம்புள புள்ளப் பொறக்குள்ள செத்துப் போயித்தாவாம். இந்தப் பொம்புள மட்டுமா வாகரயில செத்த? இந்த நாசமாப் போன ஆமிக்காறனுகள் நம்மட அப்பாவிச் சனங்களுக்குள்ள எலுவா செல்ல அடிச்சிரிக்கானுகள். அந்தச் செல்லில பால்மணம் மாறாப் பச்ச மண்ணுகளும் பள்ளிப் புள்ளயளும் நம்ம மாதிரி வயசு போனதுகளுமெண்டு எல்லாமா அம்பதுக்கு மேல செத்திரிக்குதுகள். பத்தின வயித்துக்குச் சோறுமில்லாமத் தவிச்ச வாய்க்குத் தண்ணியுமில்லாம அதுகள் என்னென்ன நினைச்சித்துச் செத்திச்சிகளோ. அதில இனிக் காலில்லாமப் போனதுகள், கையில்லாமப் போனதுகள், கண்ணில்லாமப் போனதுகள் எண்ட கணக்கு வேற.

ம்…..எளியவன வலியவன் கேட்டா வலியவன வல்லவன் கேப்பான் எண்டு நம்மட பக்கத்துல ஒரு பழமொழி இரிக்கிலுவா? எல்லா உலகத்தமிழரும் தலைநிமிந்து நிக்கக் கூடிய மாதிரி செய்த வல்லவன் எலுவா நம்மட தலைவன். அந்த தலைவன் மாவீரர் நாள் பேச்சில தமிழர் எல்லாம் இனியென்ன செய்யோணும் எண்டு கணக்காச் சொல்லியிரிக்கான். “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” எண்டு இந்தியாவில சுதந்திரம் வாறதுக்கு முதலே பாரதி எண்ட புலவன் பாடினான் எண்டு நம்மட கண்டுமணி வாத்தியார் சொல்லித் தந்தது நெஞ்சில பச்சமரத்துல ஆணி அடிச்ச போல நிக்கிது. “தனி அரச அமைச்சே தீருவம்” எண்டு தலைவன் சொன்னதக் கேக்கக்குள்ள எனக்கும் பாரதிய மாதிரி பாடோணும் போலக் கிடக்கு.

“கடல் வத்தும் கடல் வத்தும் எண்டு காத்திருந்த கொக்குக் குடல் வத்திச் செத்திச்சாம்”. தமிழன்ட கதயும் அந்தக் கொக்கு மாதிரி ஆகிரக்கூடாது. தலைவன் சொன்ன மாதிரி நாம எல்லாம் ஒண்டா சேந்துத்து நிண்டு இந்த சிங்களவன நம்மட ஊரில இருந்து தொரத்தோணும். எது எப்பிடியெண்டாலும் சிங்களவன் ஒருநாளும் சமாதானமா ஒண்டயும் தரமாட்டான். அடிச்சுத்தான் எடுக்கோணும். வேறென்னத்த நான் சொல்ற? பொறகும் எழுதுவன்.

இப்படிக்கு,
உங்கள் உண்மையுள்ள,
மானத்தமிழன்,
கந்தப்போடி.


பதிவு

No comments: