Monday, 25 December 2006

படகு இன்ஜினில் பழுது கடலில் தவித்த 7 அகதிகள் மீட்பு

புதுக்கோட்டை, டிச. 25: புதுக்கோட்டை அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் 7 பேர் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் கட்டு மரத்தில் 7 பேர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் என்பவர், 7 பேரையும் மீட்டு அவருடைய விசைப் படகில் கரைக்கு அழைத்து வந்தார்.

அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால் அங்கு வாழ முடியாமல், யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து மின் மோட்டார் பொருத்திய கட்டு மரத்தில் தமிழகத்துக்கு தப்பி வந்தோம்.
நடுக்கடலில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு தவித்தோம். அப்போது, பாலதண்டாயுதம் எங்களை காப்பாற்றினார்" என்று அவர்கள் கூறினர்.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நித்தியானந்தம், அவருடைய மனைவி சுதர்ஷினி, மகள் கஜாயினி, அவருடைய மகன் கார்த்திபன் மற்றும் அருணன், குபேந்திரன், நாகேஸ்வரன் ஆகிய 7 பேரையும் கடற்படையினர் தங்கள் முகாமில் வைத்துள்ளனர். விசாரணை முடிந்ததும், அகதிகள் முகாமுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தினகரன்

No comments: