வாகனம் வாங்க வடக்கு வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் புலிகள்
[09 - December - 2006]
புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்வதற்காக வாகன விற்பனை நிலையம் ஒன்றில் குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட லொறி ஒன்றைக் கொள்வனவு செய்த ஐந்து தமிழர்களை மிரிஹான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட நடவடிக்கைப் பொலிஸ் பிரிவினர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்துள்ளனர். இவ்வாறு மிரிஹான பிரதேசத்திலுள்ள வாகன விற்பனை நிலையத்திலிருந்து மேற்படி நபர்களால் வாங்கப்பட்டுள்ள குறித்த லொறி 25 இலட்சம் ரூபா பெறுமதி உடையதெனவும், புலிகள் இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காகவே அவர்கள் உயர் குளிரூட்டல் வசதிகள் கொண்ட அந்த லொறியை விலைகொடுத்து வாங்கியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொலிஸ் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கேற்ப, இந்த நபர்களால் வாங்கப்பட்டுள்ள மேற்படி குளிரூட்டப்பட்ட லொறியைப் பயன்படுத்தி ஏதோ ஒரு தாக்குதலை நடத்துவதற்கு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்படி நபர்கள் புலிகள் இயக்கத்தினருக்காகவே அந்த லொறியை விலைக்கு வாங்கினார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், குறித்த லொறியை வாங்குவதற்காக புலிகள் இயக்கத்தினரே அவர்களுக்கு 25 இலட்சம் ரூபா பணத்தொகையையும் கொடுத்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடையே தமிழ்ப் பெண் ஒருவரும் இருப்பதாகவும் இவர்களில் மூன்று நபர்கள் மாத்தளையில் வசிப்பவர்களெனவும் மற்றைய இரண்டு நபர்களும் அரச படையினரால் விடுவிக்கப்படாத கிளிநொச்சிப் பிரதேசத்தில் மல்லாவி என்னும் இடத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து சந்தேக நபர்களும் குறித்த லொறியை கொள்வனவு செய்வதற்காக சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே அப்பகுதிக்கு வந்துவிட்டார்கள் எனவும் அவர்கள் அந்த வாகன விற்பனை நிலையத்துக்குச் சென்று தமக்கு குளிரூட்டப்பட்ட லொறி ஒன்று விலைக்குத் தேவை என்று கூறியதாகவும் அப்போது பதிவு செய்யப்படாத குறித்த லொறியை விற்பனையாளர்கள் காட்டியதும் அதனை சோதனை செய்து பார்த்த சந்தேக நபர்கள் அதைத் தாம் விலைக்கு வாங்குவதாகவும் அந்த லொறியின் வலது பக்கக் கதவைத் திறக்க முடியாதபடி அடைத்துத் தரும்படியும் கூறியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த வாகன விற்பனை நிலையத்தில் வைத்து அந்த லொறியின் குறித்த பக்கக் கதவு ஒட்டி அடைக்கப்பட்டதாகவும் பின்னர் கடந்த 4 ஆம் திகதி பகல் அந்த சந்தேக நபர்கள் லொறியை வாங்குவதற்காக அங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் அந்த லொறியை விலைக்கு வாங்கிக் கொண்டு செல்லும் போதே கோட்டே பிரதேசத்தில் வைத்து மிரிஹான விசேட நடவடிக்கைப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அந்த லொறியை திருகோணமலைக்கு எடுத்துச் சென்று வேறொரு நபரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் இவ்வாறு அதை விலைக்கு வாங்குபவர் ஒரு தமிழர் எனவும் அவருடைய வங்கிக் கணக்குக்கு கிளிநொச்சி, வவுனியா, பகுதிகளிலுள்ள இரண்டு வங்கிகள் மூலம் பணம் போடப்பட்டிருப்பதாகவும் மேற்படி சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இவ்வாறு இந்தப் பணத் தொகை புலிகள் இயக்கம் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களால் மேற்படி சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைது செய்ப்பட்ட ஐந்து நபர்களும் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
மேல் மாகாண தெற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி.பி.பத்திரண, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.உதயபால ஆகியோர் அறிவுறுத்தலின் கீழ் மிரிஹான விசேட குற்ற நடவடிக்கை பிரிவு நிலைய அதிகாரி உபுல் சமரசிங்க பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க, அனில் ஜயந்த, குமாரசிங்க ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-திவயின: 6-12-2006-
தினக்குரல்
Saturday, 9 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment