Monday, 2 July 2007

வடைகறி

தேவையானப் பொருட்கள்

கடலைப்பருப்பு-ஒரு கோப்பை
வெங்காயம்-நான்கு
தக்காளி-ஒன்று
துருவிய தேங்காய்-ஒரு கோப்பை
பச்சைமிளகாய்-ஆறு
நசுக்கிய முழூ பூண்டு-ஒன்று
துருவிய இஞ்சி-இரண்டு துண்டு
மிளகாய்த்தூள்-ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டிசோம்பு-இரண்டு தேக்கரண்டி
கடுகு-அரைதேக்கரண்டி
பட்டை-இரண்டு துண்டு
ஏலக்காய்-நான்கு
கிராம்பு-நான்கு
பிரிஞ்சி இலை-இரண்டு
எண்ணெய்-முக்கால் கோப்பை
உப்பு-இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-ஒரு பிடி

செய்முறை

கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மைய்ய அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும்.வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சைமிளகாயில் நான்கை மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும்.பூண்டை ஒன்ரும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.ஊறிய பருப்பில் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும்.பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.அதைத் தொடர்ந்து தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள்,மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காப் பால், மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

No comments: