Monday, 25 June 2007

15 வயது சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர். மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன் ஒரு வீடியோ படத்தை அங்கு திரையிட்டார். ஒரு பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று டாக்டர்கள் கேட்டனர். அதற்கு முருகேசன், இருக்கிறது, இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது எனது 15 வயது மகன் திலீப் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முருகேசனின் செயலுக்கு டாக்டர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் தவறு என்று கூறினர். அதை மறுத்த முருகேசன், கின்னஸ் சாதனைக்காக இந்த அறுவைச் சிகிச்சையை எனது மகன் செய்தான். வெற்றிகரமாக இந்த அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எதிர் கேள்வி கேட்டார் முருகேசன். ஆனால் அங்குள்ள டாக்டர்களால் முருகேசனின் செயலை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள திலீப், பத்தாவது வகுப்பை முடித்து விட்டு மணப்பாறையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறான். முருகேசனின் செயலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மணப்பாறை பிரிவு அவசரமாக கூடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அகில் இந்திய தலைமை அலுவலகத்திற்கும் இந்த தீர்மான நகலை அனுப்பியுள்ளனர். டாக்டர் முருகேசனின் செயல், ஒரு உயிருடன் விளையாடியதற்கு ஒப்பாகும். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் மோகன்தாஸ், முருகேசனின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது டாக்டர் படிப்பை ரத்து செய்யும் வகையில் பரிந்துரை செய்ய முடியும். திருச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் இதுகுறித்து தீர்மானிப்போம் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கோட்டாட்சியர் இந்த விசாரணையை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments: