'குற்றப்பத்திரிக்கை'க்கு விடுதலை!
நீண்ட காலமாக ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து வந்த குற்றப்பத்திரிக்கை திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் குற்றப்பத்திரிக்கை. ஆர்.கே.செல்வமணி இதை இயக்கினார். இப்படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து வந்ததால் பல ஆண்டுகளாக படத்தை வெளியிட முடியவில்லை.
இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வசதியாக சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை படத்தை ஒரு திரையரங்கில் வைத்து பார்த்தனர்.
மேலும், தயாரிப்பாளர் தரப்பில் வழங்கப்பட்ட சி.டி. ஒன்றையும் நீதிபதிகள் பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை படத்தை திரையிட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்யக் கோரிய தணிக்கை வாரியத்தின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பின் மூலம் 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் மக்கள் முன் 'தாக்கல்' செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து இயக்குநிர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், கடந்த 1991ம் ஆண்டு படத்தை ஆரம்பித்து 1992ம் ஆண்டு எடுத்து முடித்தோம். ஒரு குழந்தை பிறப்பதற்குக் கூட 10 மாதங்கள்தான் ஆகும். ஆனால் அதையும் தாண்டி 14 ஆண்டுகள் ஆகி விட்டது இப்படத்தை வெளியிட.
இப்படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதல்ல. இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது குறித்து எனக்குத் தெரியாது. நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
நீண்ட காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட இந்தக் காலத்திற்கும் பொருத்தமான வகையில் இப்படம் இருக்கும். தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டால் ஒரே நாளில் கூட படத்தை வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் செல்வமணி.
தகவல்
Friday, 1 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment