[22 - December - 2006]
வேலை தேடி வீட்டுப் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற பெண்ணொருவர் சுயநினைவு இழந்த நிலையில் நோயாளர் கட்டிலில் இலங்கை திரும்பிய பரிதாபமிக்க சம்பவமொன்று ராகமையில் இடம்பெற்றுள்ளது.
ராகமை, கெந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த ஜயமாலி ரணசிங்க (வயது- 41) என்பவரே இவ்வாறு பரிதாபமிக்க நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பியுள்ளார். தனது 28 வயதில் முதன் முறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்ற இவர் இறுதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையமொன்றின் ஊடாக சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.
இதேவேளை, தான் வேலைக்குச் சென்ற வீட்டில் உள்ளவர்கள் இரக்கமற்றவர்களெனவும் அவர்களால் தனக்கு தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாகவும் வேலைக்குச் சென்ற ஆரம்ப காலத்திலேயே அவர் தனது உறவினர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தான் இருக்கும் வீட்டில் பிரச்சினை அதிகமெனவும் மனிதப் பண்பு என்பது இவர்களிடத்தில் சொற்பமேனும் இல்லையெனவும் குறித்த பெண்மணி தனது தாய்க்கு இறுதியாக எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதுடன் விரைவில் நாடு திரும்பப் போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பெண்மணியின் குடும்பத்தினர் அவரை நாட்டிற்கு திருப்பி எடுக்கும் முகமாக முகவர் நிலையத்தினூடு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலனளிக்காமல் போயுள்ளது.
இறுதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடு செய்து தூதுவராலயத்தின் ஊடாக இது தொடர்பாக ஆராய்ந்தபோது அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
பல மாதங்களாக வைத்தியசாலையில் இருந்து வந்த அவரை அந்நாட்டின் செஞ்சிலுவைக் குழுவினரே வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷமருந்தி வீதியில் விழுந்து கிடந்தபோதே அவர் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டதாக செஞ்சிலுவைக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதலே சுயநினைவிழந்திருந்த குறித்த பெண்மணி விஷம் அருந்தினாரா அல்லது அவருக்கு விஷம் ஊட்டப்பட்டதா என்பது குறித்து அறிய வழிகள் எதுவும் இல்லை. எவ்வாறிருப்பினும் அவரது உடம்பில் எரிகாயங்கள் இருக்கக் காணப்படுவதாகவும் பற்கள் சில உடைக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்பெண்மணி கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இவரை இங்குள்ள வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற உறவினர்கள் முயற்சித்தபோதும் குணப்படுத்துவது கஷ்டமென வைத்தியர்கள் தெரிவித்துவிட்டனர். ராகமையில் தனது சகோதரர் வீட்டில் தங்கியிருக்கும் இப்பெண்மணிக்கு உணவுகள் அனைத்தும் குழாய்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.
நடந்தது என்னவென்று அறிய உறவினர்கள் பல வழிகளில் முயன்று அது பலனளிக்காத நிலையில் நட்டஈட்டுத் தொகையைக் கூட அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தினக்குரல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment