Friday, 29 December 2006

மூட நம்பிக்கையால் ஏற்பட்ட வினை; மருத்துவமின்றி 8 வயது சிறுமி மரணம்

[29 - December - 2006]

பலி கொடுத்தல், பேய் விரட்டல், நூல் கட்டுதல் போன்ற மூட நம்பிக்கைகளுடனான முறைகளைக் கையாண்டதாகக் கூறும் பெற்றோர் தனது எட்டு வயதுச் சிறுமியை இழந்த சம்பவமொன்று மாத்தளை பிட்டகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாகக் காய்ச்சல், சிறுநீர் கழிக்க முடியாமை போன்ற நோயினால் அவதியுற்ற எட்டு வயதுச் சிறுமிக்கு உரிய வைத்தியம் செய்யாமல் கோழி பலி கொடுத்தல், நூல் போடுதல், சாமி ஆட்டம் போன்ற வைத்தியங்களை மேற்கொண்ட பின் உடல்நிலை மேலும் மோசமடையவே சிறுமியை மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சற்று நேரத்தில் சிறுமியின் உயிர் பிரிந்ததாக சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உரிய வைத்தியம் செய்வதற்குப் பெற்றோர் முயற்சி செய்யாத காரணத்தாலும் அவர்களின் அறியாமையினாலும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாமற் போயிருப்பது ஓர் துரதிர்ஷ்ட நிகழ்வு என மரண விசாரணைகளை மேற்கொண்ட மாத்தளை மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஜி. ஜயதிலக கூறினார்.

சிறுமியின் தந்தையான பி.ஜி. திலகரத்னவும் சாட்சியமளித்தார். மாத்தளை சட்ட வைத்திய அதிகாரி றசிக்க திசாநாயக்க பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின் சிறுமிக்கு உடலில் நீர் இன்மையால் ஏற்பட்ட நோய் காரணமாக மரணம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தினக்குரல்

No comments: