Sunday, 26 November 2006

இது பழைய கதை அல்ல !

ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். வெகு தூரம் நடந்ததால் அவனுக்குக் களைப்பு உண்டாயிற்று. எனவே தன்னுடைய தொப்பிக் கூடையை பக்கத்தில் வைத்து விட்டு ஒரு மரத்தடியில் தூங்கினான்.

ஏதோ சத்தம் கேட்டு விழித்த வியாபாரி திகைத்தான். அவனுடைய தொப்பிக் கூடை காலியாய் இருந்தது. மேலே மரத்தில் ஏராளம் குரங்குகள் ஆளுக்கொரு தொப்பியை வைத்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன.
வியாபாரி யோசித்தான். பரிணாம வளர்ச்சிக்கு முன்பிருந்த தன்னுடைய முன்னோர்களான அந்த குரங்குகளை கெஞ்சிப் பார்த்தான் முடியவில்லை. அவை தொப்பியைக் கொடுத்தபாடில்லை.

இவன் சிரித்தால்.. அவையும் சிரித்தன.இவன் தலையாட்டினால் அவையும் தலையாட்டின.

வியாபாரிக்குள் ஒரு திட்டம் உதித்தது. அவன் தன்னுடைய தலையிலிருந்த தொப்பியை எடுத்தான். எல்லா குரங்குகளும் தங்கள் தலையிலிருந்த தொப்பிகளை கையில் எடுத்தன.

இவன் தொப்பியை குரங்கைப் பார்த்து வீசினான். உடனே குரங்குகளும் தொப்பியை இவனை நோக்கி வீசின. இவன் எல்லா தொப்பிகளையும் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்.

நிற்க…

இது பழைய கதை தான்.

இந்த நிகழ்ச்சி நடந்த பல வருடங்களுக்குப் பிறகு இவனுடைய பேரன் அதே தொப்பி வியாபாரத்துக்குப் புறப்பட்டான். அவன் வாரிசு வியாபாரி !.

அதே காடு. அதே மரம்.. அதே போல குரங்குகள்.. அதே போன்ற தூக்கம்… எல்லாம் அப்படியே நடந்தன.

இவன் எழுந்தான். எல்லா குரங்குகளும் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தன.

இவன் சிரித்தான். தன்னுடைய தலையிலிருந்த தொப்பியை எடுத்து ஒரு குரங்கை நோக்கி வீசினான்.

குரங்கு அந்த தொப்பியை எட்டிப் பிடித்தது. பின் சரசரவென்று கீழே இறங்கி அந்த பேரனுடையகன்னத்தில் ஒரே அறை !!!
அவன் திகைத்துப் போய் பார்க்க குரங்கு சொன்னது..

“உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாருன்னு நினைப்பா…?”

No comments: