குற்றப்பத்திரிக்கை' வெளிவருமா?
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான குற்றப் பத்திரிக்கை படத்திற்கு அனுமதி வழங்குவதில் தணிக்கை வாரியம் பாரபட்சம் காட்டுவதாக படத் தயாரிப்பாளரின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி, தணிக்கை வாகியத்தின் பாரபட்சப் போக்கை நிரூபிக்கும் வகையிலான பட ஆதாரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படு கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் குற்றப் பத்திரிக்கை. ஆர்.கே.செல்வமணி இப்படத்தை இயக்கினார். ரவி யாதவ் என்பவர் தயாரித்துள்ளார். படம் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது. டிரிப்யூனல் வரை போயும் கூட இப்படத்திற்கு இன்னும் அனுமதி கிடைத்தபாடில்லை.
இந் நிலையில் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ரவி யாதவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. சமீபத்தில் நீதிபதிகள் இருவரும் குற்றப்பத்திரிக்கை படத்தைப் பார்த்தனர். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்படத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது போல காட்சிகளே இல்லை. எதற்காக இப்படத்தை தணிக்கை வாரியம் எதிர்க்க வேண்டும் என்று கேட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தபோது அந்த விசாரணையை நடத்திய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தயாரித்த டாக்குமெண்டரி படத்தின் சிடியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் வாதிடுகையில், இந்த டாக்குமெண்டரி படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் பற்றிய பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலங்கையில் புலிகள் பயிற்சி பெறுவது போன்ற காட்சிகளையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று படமாக்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனே தெளிவாக விளக்கிப் பேசியுள்ளதும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில் ஒரு கற்பனை கதையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை படத்திற்கு ஏன் அனுமதி தர தணிக்கை வாரியம் மறுக்கிறது?
தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்ககும்போது ஒரு கண்ணில் வெண்ணையையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போல உள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 5 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. எனவே குற்றப்பத்திரிகைக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதைத் தொடர்ந்து டாக்குமெண்டரி படத்தைப் பார்ப்பதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Source
Wednesday, 29 November 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment